Thursday, January 19th, 2017

முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் சம்பந்தன் பாடம் கற்க வேண்டும்- இரா.துரைரத்தினம்.

Published on December 17, 2016-7:11 pm   ·   No Comments

sampanthan and maiththiriகடந்த வாரத்தில் வெளிவந்த சில செய்திகளை பார்த்த போது தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அல்லது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனோ வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாக இருந்தாலும் முஸ்லீம் தலைவர்கள் தமது இனத்திற்காக அவர்கள் செய்யும் பணிகள் எடுக்கும் முடிவுகள் அரசியல் சாணக்கியமும் விவேகமும் உறுதியும் மிக்கவை என்பதை மறுக்க முடியாது.

அந்த செய்திகள் இவைதான்……

1. மட்டக்களப்பு பன்குடாவெளியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்து காணியை அபகரிக்க முற்பட்ட மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை பொலிஸார் கைது செய்யவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும் மேலிடத்து உத்தரவு இன்மையால் பிக்குவை கைது செய்ய முடியாது இருப்பதாக பொலிஸார் கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஒரு செவ்வியில் தெரிவித்திருந்தார்.

2. இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை அரசு தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உரையாற்றிய உடன் ஜனாதிபதியும் பிரதமரும் அவரை அழைத்து பேசியதுடன் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து பேசியிருக்கிறார்கள். பொதுபலசேனா முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இதனையடுத்து சில வாக்குறுதிகளை ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

3. முஸ்லிம் மக்களுடனான பிரச்சினையை நிறுத்திவிட்டு தேசிய ரீதியில் எழுந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக களத்தில் குதிக்க தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசாரதேரர் இதனை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

முதலாவது செய்தி தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

இரண்டாவது செய்தி முஸ்லீம் அரசியல் தலைமைகளின் பலத்தையும் ஆளுமையையும் உறுதியான ஒற்றுமையான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி நின்கின்றன.

மூன்றாவது செய்தி பௌத்த பிக்குகளும் பொதுபலசேனா போன்ற பௌத்த அமைப்புக்களும் இலங்கையில் பலமாக இருந்தாலும் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியத்தால் உறுதியான ஒற்றுமையான செயல்பாடு பொதுபலசேனா தனது முடிவை மாற்றும் அளவிற்கு வந்துள்ளது. ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கடும் உத்தரவால் முஸ்லீம்களுக்கு எதிராக இனி செயல்படுவதில்லை என்ற முடிவுக்கு பொதுபலசேனா வந்திருக்கிறது.

நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களை அந்த இடத்திலேயே கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு. மேலிட உத்தரவு காரணமாக அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். அந்த மேலிடம் என பொலிஸார் கூறுவது ஜனாதிபதி பிரதமர் அல்லது சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கலாம்.

நீதிமன்ற உத்தரவை மீறி குற்றத்தை புரியும் ஒருவரை கைது செய்யுமாறு அரசின் உயர் மட்டத்தை கோர முடியாதவர்களாக இருக்கிறார்களா அல்லது தமிழ் அரசியல் தலைமைகளை செல்லாக்காசாக மைத்திரி தலைமையிலான அரச உயர்மட்டம் கருதுகிறதா   என்ற கேள்வி எழுகிறது.  

பொதுபலசேனா முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்தா விட்டால் ஆயுதம் ஏந்துவோம் என முஸ்லீம் அரசியல் தலைமை எச்சரித்ததும் ஜனாதிபதியின் உத்தரவின் படி பொதுபலசேனா முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரத்தை நிறுத்தியிருக்கிறது. இனிமேல் முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரத்திலோ அல்லது நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதில்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

முஸ்லீம் அரசியல்வாதிகள் அனைவரும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று தமது இனத்திற்கும் தமது பிரதேசத்திற்கும் பாரிய அபிவிருத்தி பணிகளை செய்து வரும் அதேவேளை அரசாங்கத்தில் இணைந்திருப்பதற்காக தமது இனம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது ஆளும் கட்சியில் இருக்கிறோம், அமைச்சு பதவிகளை பெற்றிருக்கிறோம் என மௌனமாக இருந்தது கிடையாது.

இஸ்லாத்திற்கு எதிரான பிரசாரத்தை நிறுத்தாவிட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்ற எச்சரிக்கை சாதாரணமான ஒன்றல்ல, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரச உயர்மட்டத்தை உலுக்கி போட்ட எச்சரிக்கை, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் பேசி முடித்த மறு விநாடி ஜனாதிபதியும் பிரதமரும் அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். மறுநாள் அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்த ஹிஸ்புல்லா கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்சவின் வெற்றிக்காக பாடுபட்டவர். கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஹிஸ்புல்லா தோல்வியடைந்த போதும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இராஜாங்க அமைச்சர் பதவியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சு பதவியோ வழங்கினாலும் தமது இனம் என்று வரும் போது அதற்காக   அரசாங்கத்திடம் பணிந்து போகவில்லை. அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டிய இடத்தில் எச்சரித்திருக்கிறார். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்திருக்கிறார். ஹிஸ்புல்லாவிடம் இருக்கும் இந்த அரசியல் விவேகமும் சாதுரியமும், துணிவும் தமிழ் அரசியல் தலைவர்கள் யாருடமும் கிடையாது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும் சலுகைகளும் தந்து விட்டார், அதனால் தமிழ் இனம் எந்த அடக்குமுறைக்கு உள்ளாகி அழிந்தாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்க கூடாது, தட்டிக்கேட்க கூடாது என மௌனமாக இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை போலன்றி அமைச்சு பதவியை பெற்றாலும் அமைச்சர்களான ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்ற முஸ்லீம் அரசியல் தலைவர்கள் துணிவுடன் அரசாங்கத்தை தட்டி கேட்டு தமது உரிமைகளை பெற்றுக்கொள்கின்றனர். தமது இனத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் காத்தான்குடி ஏறாவூர் அல்லது ஓட்டமாவடி ( முஸ்லீம் பிரதேசங்களில் ) பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் கால் வைத்திருக்க முடியுமா? அல்லது காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குள் சென்று பிரதேச செயலாளரை அச்சுறுத்த முடியுமா? அவ்வாறு செய்திருந்தால் சிறைக்கம்பிகளை எண்ணியிருப்பார். அதுமட்டுமல்ல மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பார். முஸ்லீம் அரசியல்வாதிகளின் பலமும் அவர்களின் ஒற்றுமையும் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நன்கு தெரியும். இதனால் முஸ்லீம் பிரதேசங்களுக்குள் அவர் கால் வைப்பதில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனத்தை பற்றி சுமணரத்ன தேரருக்கு மட்டுமல்ல, ஜனாதிபதி மைத்திரிக்கும் தெரியும்.

முஸ்லீம் அரசியல் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து தமது இனத்திற்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் மீட்பதிலும் தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் அபிவிருத்தியில் முதலாம் இடத்தில் இருப்பது முஸ்லீம் பிரதேசங்கள் தான். இரண்டாம் மூன்றாம் இடங்களில் தான் சிங்கள தமிழ் பிரதேசங்கள் உள்ளன. பௌதீக வளங்களில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் இன்று முதலிடத்தில் இருப்பது முஸ்லீம்கள் தான்.

இலங்கையில் உயர்கல்வி நிறுவனமான இரு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்த இரண்டும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதுதான்.
ஓன்று பி.சி.ஏ.எஸ் கம்பஸ் எனப்படும் உயர்கல்வி நிறுவனமாகும். காத்தான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமானை தலைவராக கொண்ட இந்த தனியார் பல்கலைக்கழகம் பிரித்தானிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேச தரத்தில் இயங்கி வருகிறது.

கடந்தமாத இறுதியில் இதன் பட்டமளிப்பு விழா கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. bcas-campus

இதன்போது மருத்துவ விஞ்ஞானம் வர்;த்தக முகாமைத்துவம் கணணி மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்புகளைப் பூர்த்தி செய்த 230 பட்டதாரிகளுக்கு பட்டங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் கட்டட நிருமாணத்துறை வர்த்தக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் முதுமானிப் பட்டங்களைப் பூர்த்தி செய்த 135 மாணவர்களுக்கு முதுமானிப் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இம்முறை 700பேர் பட்டங்களை பெற்று வெளியேறியிருக்கிறார்கள். இது முஸ்லீம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகும்.

bcas-campus-2இலங்கையில் கொழும்பு, கல்கிஸ்லை, கண்டி, குருநாகல், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வளாகங்களையும்  துணை வளாகங்களையும் கொண்டு இயங்கும் பிசிஏஎஸ் கம்பஸ் அதன் சிறப்பான கல்விச் சேவைக்காக நான்கு சர்வதேச விருதுகளை இவ்வாண்டில் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கும் புலமைபரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. முஸ்லீம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இப்பல்கலைக்கழகம் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை தலைவராக கொண்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரிலான தனியார் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு எல்லைக்கிராமமான ரிதிதென்னயில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஹிஸ்புல்லாவின் மிகப்பெரிய சாதனையாக வரலாற்றில் இது பேசப்படும். இந்த மிகப்பெரிய சாதனையை படைக்கப்போகும் பல்கலைக்கழகத்தை அமைத்து வரும் ஹிஸ்புல்லாவை முஸ்லீம் சமூகம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து சமூகமும் பாராட்ட வேண்டும்.batti-ga

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் ஹிஸ்புல்லா ரிதிதென்னயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரச நிலத்தை பெற்றுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் இந்நிலத்தை இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கியிருக்கிறார்.

அரபுநாடுகளின் பெரும்நிதி உதவியுடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.
மலேசியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போவில் அமைந்துள்ள அம்ஜேயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.batticaloa-campus

இந்நிகழ்வில், மலேசியா பேராக் மாநில முதலமைச்சர் சாம்பிரி அப்துல் காதிர், மலேசியா கல்விஅமைச்சர் மஹ்ஷிர் ஹாலித், இலங்கையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஸுல்தான் அஸ்லான் ஷ பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலகின் சிறந்த பௌதிக வளங்களை கொண்ட பல்கலைக்கழகமாக இது அமைக்கப்பட்டு வருகிறது. மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப கட்டிட நவீன கல்விக் கூட வசதிகளை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், கணக்கியல், முகாமைத்துவம், உல்லாசப்பிரயாணத்துறை, ஹொட்டல் முகாமைத்துவம், என பல துறைகளில் பட்டப்படிப்புக்களும் பட்டமேற்படிப்புக்களும் நடைபெற உள்ளன.

பொலனறுவை மாவட்டத்தை கடந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பிரவேசிக்கும் போது முதலில் வருவது வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ரெதிதென்ன கிராமமாகும். மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும் வளர்ச்சியடைந்த அரபு நாடு ஒன்றிற்குள் பிரவேசிக்கிறோமா என்ற பிரமையை ஏற்படுத்தும் வகையில் இப்பல்கலைக்கழக கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. முகப்பில் ஈச்சமரங்கள் நாட்டப்பட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. rithithenna-1

பேரணி நடத்துவதற்காக கடந்த 3ஆம் திகதி மட்டக்களப்பை நோக்கி வந்த பொதுபலசேனா அமைப்பினர் ரிதிதென்ன பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தரித்து நின்ற போதுதான் மட்டக்களப்பு எல்லையில் ஹிஸ்புல்லாவினால் பிரமாண்டமான தனியார் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஒருபுறம் அவர்கள் இதைக்கண்டு சீற்றமடைந்தாலும் ஒரு அரசாங்கத்தினால் செய்ய முடியாத அளவிற்கு பிரமாண்டமான பல்கலைக்கழகத்தை ஒரு முஸ்லீம் அமைச்சர் அமைத்து வருகிறார் என ஆச்சரியப்பட்டனர்.

கல்வி, பொருளாதாரம், வர்த்தகம், ஆட்சி அதிகாரம் என அனைத்து துறைகளிலும் இலங்கையில் சனத்தொகை அடிப்படையில் மூன்றாம் நிலையில் இருக்கும் முஸ்லீம் சமூகம் இமயத்தை தொட்டு விட்டது.

கல்தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி என்றும் ஆண்டபரம்பரை என்றும் மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சமூகம் அனைத்தையும் இழந்து படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது.

வடக்கு கிழக்கில் சகோதர இனமான முஸ்லீம் இனத்திடமிருந்து தமிழ் இனம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது.0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kokkaddicholai

கொக்கட்டிச்சோலை படுகொலை 30ம் ஆண்டு வணக்க நிகழ்வு 28ஆம் திகதி சனிக்கிழமை. [January 18, 2017]

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் ...
batti

கடும் வரட்சி- மட்டக்களப்பில் 13164 விவசாயிகளும் 76199 பொதுமக்களும் பாதிப்பு [January 17, 2017]

கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் ...
sasikumar

2014ம் வருடத்தில் மட்டக்களப்பில் சிறந்த இளைஞர் சேவை அலுவலராக சசிகுமார் தெரிவு. [January 17, 2017]

கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ...
11 (1)

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட 230பேருக்கும் நியமனக்கடிதங்கள். [January 16, 2017]

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் மூன்றிற்கு திறந்த போட்டி ...
DSC_5706

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ கணேசன் [January 16, 2017]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல ...
kattankudy

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. [January 16, 2017]

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை ...
kattankudy Hospital

காத்தான்குடி தள வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட போதனா வைத்தியசாலையாக தரமுயர்கிறது- [January 12, 2017]

நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் பிரதேசங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு ...
jpeg 8

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் குடிசார் சமூக அமைப்பு உதயம். [January 12, 2017]

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை, போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான குடிசார் சமூக அமைப்பொன்று ...
01

கொத்மலை தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து பெண் கங்காணி மரணம் [January 10, 2017]

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் ...
hisbullah

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். [January 10, 2017]

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி ...